சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 1.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகளும் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (45) என்பவர், சுற்றுலா பயணயாக இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வந்துள்ளார். இந்த நிலையில், விமான நிறுவன அதிகாரிகள் அவரை பரிசோதித்தபோது, அளவுக்கு அதிகமான மதுபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து விமானம் நிறுவன அதிகாரிகள், அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், இளவரசனின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து, போர்டிங் பாஸில் ஆப் லோடு என்று முத்திரை குத்திம் திருப்பி அனுப்பி உள்ளனர். இதை அடுத்து இளவரசன் ஆத்திரத்தில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அதிகாரிகள் இளவரசனை விமானத்தில் ஏற்ற உறுதியாக மறுப்பு தெரிவித்ததோடு, விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்த அவருடைய உடமைகளையும் இறக்கி, இளவரசனிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் இளவரசன் வெளியே நடந்து வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக கவுண்டர் ஸ்டாப் பணியில் உள்ள 25 வயது பெண் ஊழியர் ஒருவரைப் பார்த்ததும், அருகே சென்று பெண் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதை அடுத்து, பெண் ஊழியர் பயந்து அலறி கூச்சல் போட்டுள்ளார்.
உடனே அங்கு நின்ற சக பயணிகள், விமான நிலைய மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் ஆத்திரத்துடன் இளவரசனைப் பிடித்து அடித்துள்ளனர். அதன் பின்பு சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் இளவரசனை ஒப்படைத்துள்ளனர். மேலும், விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்னை விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது இளவரசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டட தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்றும், தற்போது சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால், இவரை கடத்தல் கும்பல் குருவியாக சிங்கப்பூருக்கு அனுப்பி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார், இளவரசனை மருத்துவப் பரிசோதனை நடத்தி, அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததற்கான சான்று பெற்றுள்ளனர். அதோடு இளவரசனை கைது செய்து, அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், பாதுகாக்கப்பட்ட விமான நிலையத்திற்குள் அநாகரிகமாக நடந்து கொண்டு பெண் ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!