சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் அருந்தியதில் சுமார் 22 பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் முதல் கண்காணிப்பாளர்கள் வரை அதிரடியாக தமிழ்நாடு காவல் துறையால் சஸ்பெண்ட் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். குறிப்பாக 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
முதற்கட்டமாக மாவட்ட காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் அனைவரும் கள்ளச்சாராயத்தில் உயிரிழக்கவில்லை என்றும்; மெத்தனால் என்ற விஷ சாராயத்தால் உயிரிழந்துள்ளனர் என தமிழக டிஜிபி விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த மெத்தனால் என்கிற விஷ சாராயத்தை சப்ளை செய்த நபர்கள் யார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது, இந்த விஷ சாராயத்தை வாங்கிய விவகாரத்தில் ஊதியூரைச் சேர்ந்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டு, அமரனுக்கு சப்ளை செய்த முத்து ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடமிருந்து விஷ சாராயத்தை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து, தற்போது அவரும் கைது செய்யப்பட்டார்.