தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி பிடிபட்டது எப்படி?

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கொள்ளையனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 750 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 24, 2023, 3:24 PM IST

சென்னை:பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள கே.எல். நகைக்கடையில் கடந்த மாதம் பத்தாம் தேதி வெல்டிங் மிஷினால் துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இக்கொள்ளை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் ஸ்ரீதர், திருவிக நகர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருவிக நகர் போலீசார் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவரை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதன் பின்னர், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய கொள்ளையன் கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் கர்நாடகா மாநிலம், பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீசாரிடம் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பிடிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை தனிப்படை போலீசார், பெங்களூரு சென்று விசாரணை செய்து கொள்ளையில் தொடர்புடைய கஜேந்திரன்(31) மற்றும் திவாகரன்(28) ஆகிய இருவரை கைது செய்து வெல்டிங் மிஷின், சிலிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பெங்களூரு போலீசாரிடம் பிடிபட்ட கொள்ளையன் கங்காதரன், ஸ்டீபன் இருவரையும் நீதிமன்ற அனுமதியோடு சென்னை போலீசார் கைது செய்தனர். இதில் இரண்டு கிலோ தங்கம் பெங்களூருவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து முக்கிய கொள்ளையன் கங்காதரனை மட்டும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு அழைத்துச்சென்று மீதமுள்ள நகை மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய அருண் மற்றும் கௌதம் ஆகிய இரண்டு பேர் குறித்து விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த தகவலின் பேரில், நகையை உருக்கிய கொள்ளையன் கங்காதரனின் மனைவி கீதா(26) மற்றும் அவரது மைத்துனரான ராகவேந்திரர்(25) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்கள் மற்றும் சுமார் 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அருண் மற்றும் கௌதம் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அருண் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து சுமார் 750 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையன் அருண் சென்னையில் பெரம்பூர் பகுதியில் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், அப்போது காவலாளி இல்லாத நேரத்தைப் பார்த்து, நகைக்கடையை நோட்டமிட்டு அவரது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும் அருண் மீது ஏற்கனவே, திருட்டு வழக்குகள் இருப்பதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை வழக்கில் இதுவரை 7 நபர்கள் கைது செய்யப்பட்டு மொத்தம் 5 கிலோ 850 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையன் கௌதமை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லிங்க்டு இன் மூலமாக சிறிய தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்யும் நைஜீரிய கும்பல் கைது!

ABOUT THE AUTHOR

...view details