சென்னை: அண்மையில் தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக திருப்பூரில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியாகின.
இந்த வீடியோக்கள் வட மாநிலத் தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும்; இதுபோன்ற வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை எச்சரித்தது.
மேலும் இது குறித்து ஜார்க்கண்ட், பீகார் மாநில அரசு அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு, வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து போலி வீடியோக்களை சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சிலர் சித்தரித்து பரப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பீகாரைச் சேர்ந்த அமன்குமார், மணிஷ் காஷ்யப் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.