சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியைச் சேர்ந்த கவுசல்யா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவர் நியூட்டனை காணவில்லை என கடந்த 19ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அண்ணா சாலையில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த நியூட்டன்கரோனா காலத்தில் அதனை மூடிவிட்டார். அவர் திரைத்துறையில் கிராஃபிக்ஸ் பணி செய்துவந்ததாகவும், திருமுல்லைவாயில் அருகே புராதன பொருள்களை விற்பனை செய்யும் கடை வைத்திருப்பதும் காவல் துறையினருக்குத் தெரியவருகிறது.
காலை திருமுல்லைவாயில் புறப்பட்டுச் சென்றவர் மாயமான நிலையில் அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தனது மாமனாருக்கு அன்றிரவு நியூட்டன் செல்போனில் அழைத்து தன்னை சிலர் கடத்திவைத்திருப்பதாகவும், 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் தன்னை விட்டுவிடுவார்கள் எனவும் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
கும்பலை பின்தொடர்ந்த காவல் துறை
இந்தத் தகவல் காவல் துறையினருக்குத் தெரியவரவே அசோக்நகர் உதவி ஆணையர் ஃபிரங் டி ரூபன் தலைமையில் ஆய்வாளர் நந்தினி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நியூட்டனின் செல்போன் சமிக்ஞையை (சிக்னல்) பின்தொடர்ந்த அதே நேரம், கடத்தலில் பின்னணி குறித்தும் விசாரணை தொடங்கியது.
மீண்டும் 20ஆம் தேதி நியூட்டன் தனது மாமனாரை அழைத்து குறிப்பிட்ட பகுதியில் பணத்தை கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்க, இதை எதிர்பார்த்து காத்திருந்த காவல் துறையினர் பணம் கொடுக்கப்போவதுபோல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
ஆனால், தங்களை யாரும் பின்தொடர்கிறார்களா எனக் கண்காணித்த கடத்தல்காரர்கள், பணம் கொடுக்கவந்தவர்களை பல இடங்களுக்கு சுற்றவிட்டு அழைக்கழித்துள்ளனர்.
இதனை உணர்ந்துகொண்ட காவல் துறையினர் அவர்கள் சென்ற வாகனங்களை விட்டுவிட்டு பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ என சுமார் 10-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வாகனங்கள் மாறி, மாறி பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர், பட்டாபிராம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பணம் வாங்க வந்த கௌதம், சுனில் ஆகியோரை காவல் துறையினர் மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதில், சுனில் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
காவல் துறையிடம் சிக்கிய கடத்தல் கும்பல்
தப்பிச் சென்ற அந்நபர் மீண்டும் நியூட்டனின் மாமனாரை அழைத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தால் நியூட்டனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால், விசாரணையை துரிதப்படுத்திய காவல் துறையினர், திருத்தணியிலுள்ள சுனிலின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி மூலம் சுனிலை தொடர்புகொண்டுள்ளனர். காவல் துறையினர் தனது வீடுவரை வந்துவிட்டதை அறிந்து பயந்துபோன சுனில் தாங்கள் திருப்பதி அருகே இருப்பதாகவும் சென்னைக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம் சென்னையிலிருந்து புறப்பட்ட தனிப்படையினர் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடத்தல்காரர்கள் வந்த வாகனத்தை மடக்கி, நியூட்டன், அவரது நண்பர் ராகுஜி ஆகியோரை மீட்டு, விக்கி, சதீஷ், சுனில் ஆகியோரை கைதுசெய்தனர். பின்னர், பூந்தமல்லி பகுதியில் பணத்தை எதிர்பார்த்து நின்றிருந்த திலீப்பையும் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட கடத்தல் கும்பல் விசாரணையில் ஏற்பட்ட டிவிஸ்ட்
இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த மேத்யூ என்பவருடன் சேர்ந்து நியூட்டன் என்பவர், தங்களிடம் ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறி கைதான ஐந்து பேர் உள்பட 21 பேரிடம் 57 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதனை விற்று இருமடங்கு பணம் தருவதாக கூறி, ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூட்டன் பணம் தராமல் பல மாதங்களாக இழுதடிக்கவே, பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி நியூட்டனிடம் பணம் கேட்டு வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மேத்யூ சென்னை வர அவரை சந்திக்க நியூட்டன் ஏற்பாடு செய்த நிலையில் திலீப், சதீஷ், கவுதம் உள்ளிட்ட ஐந்து பெரும் திருமுல்லைவாயில் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே மேத்யூ நைசாக அங்கிருந்து நழுவினார். இதையடுத்து, பணம் கொடுத்த ஏமாந்த ஐந்து பேரும் சேர்ந்து நியூட்டனையும் அவரது நண்பர் ராகுஜியையும் காரில் கடத்திச் சென்று, அவரது குடும்பத்தாரிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
இதனையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் உள்ளிட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த விருகம்பாக்கம் காவல் துறையினர், கார் ஓட்டுநர் உள்பட முக்கியக் குற்றவாளிகளாக ஆறு பேர் மீதும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டனர்.
விசாரணையில் மாட்டிக்கொண்ட ரைஸ் புல்லிங் மோசடியாளர்கள் மேலும், நியூட்டன் ரைஸ் புல்லிங் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதால், அவர் மீதும், அவரது நண்பர் ரகுஜி மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரைஸ் புல்லிங் மோசடியில் மூளையாகச் செயல்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த மேத்யூ தலைமறைவாக உள்ள நிலையில், உயர் அலுவலர்களின் உத்தரவின்பேரில் அவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 14 பவுன் நகை மோசடி