சென்னை:தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை தடுப்பதற்காக "ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0" என்ற பெயரில் தீவிர சோதனை மேற்கொண்டு, போதைப் பொருட்களை கைப்பற்றி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயபுரம் அண்ணா பார்க் அருகே போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக ராயபுரம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு கார் ஒன்றில் போதைப்பொருள் கைமாறுவது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை கைமாற்றிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காசிம்(40), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல்(38) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 500 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட காசிம் டெல்லியிலிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை டெல்லியிலிருந்து ரயில் மூலமாக கொண்டு வந்து, குமரவேல் என்பவரிடம் விற்பனை செய்ய முயன்றதாகத் தெரியவந்தது. கைதான குமரவேல் ஏஜெண்டாக செயல்பட்டதாகவும், நாகை சுயேட்சை ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ் ஆகியோர் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும், அதற்கான ஏஜெண்டாக குமரவேலை நியமித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.