சென்னை:சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன. அந்த குடியிருப்புகள் அருகே இப்போது புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில் உள்ள 324 வீடுகளை தங்களுக்கே ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனக்கோரி, நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த சில நாட்காக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், மீனவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.
இந்த நிலையில், நான்காவது நாளாக இன்றும்(ஏப்.30) நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மீனவர்களை கைது செய்தனர். அதேபோல், நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற மீனவர் சங்கத் தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். தென்னிந்திய மீனவ நல சங்கத் தலைவர் பாரதி, அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் ரூபேஷ் குமார், மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.