சென்னை:அம்பத்தூர் - அயப்பாக்கம் நெடுஞ்சாலை டி.ஜி. அண்ணா நகரைச் சேர்ந்தவர் சரத்சந்திரன் (70). இவர், ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நிர்மலா (64). இவர்களது வீட்டின் அருகே மகன் சந்தோஷ்ராஜ் (30), தனது மனைவி பிரேமலதாவுடன் வசித்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சரத்சந்திரன், தனது மூத்த மகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு நிர்மலா வீட்டில் தனியாகத் தூங்கியுள்ளார். பின்னர், மறுநாள் காலை சந்தோஷ்ராஜின் வீட்டின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அவர், கூச்சலிடவே அக்கம்பக்கத்தினரை வந்து வீட்டைத் திறந்துவிட்டனர்.
உடனடியாக சந்தோஷ்ராஜ் தாய் நிர்மலா வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் கட்டிலில் கொலைசெய்யப்பட்டு கிடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நிர்மலாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடரந்து இது குறித்து தகவலறிந்த ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அம்பத்தூர் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான காவல் துறையினரைத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்தனர்.
அதில், நள்ளிரவு ஒரு இளைஞர் நிர்மலா வீட்டிற்குச் சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு வருவது தெரியவந்தது. தொடர்ந்து நிர்மலா வீட்டை சோதனை செய்தபோது, அங்கிருந்து செல்போன், கைப்பை, நெத்திச்சுட்டி ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான உருவத்தை வைத்து இளைஞரைத் தேடிவந்தனர்.
இதனையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் அம்பத்தூர் ரயில்வே நிலையத்தில் ஒரு இளைஞர் சுற்றித்திரிவதைக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கண்டறிந்த காவல் துறையினர், அந்நபரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர், அப்போது நிர்மலாவின் செல்போன் இருந்தது தெரியவந்தது.