சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் சோழம்பேடு சாலையில் தனியார் விடுதி இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேலன்(29) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதே விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சோனு என்கிற சஞ்சிவ் சக்கரவர்த்தி(36) ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி ஹோலி பண்டிகை என்பதால் சோனு குடித்துவிட்டு தங்கும் விடுதியில் சத்தமாக பாட்டு வைத்து கத்திக்கொண்டு நடனம் ஆடியுள்ளார். இதைப் பார்த்த விடுதி மேலாளர் கதிர்வேலன் சோனுவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சோனு விடுதி மேலாளர் கதிர்வேலனை காய்கறி வெட்டும் கத்தியால் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். பின்னர் சோனு தனது இடது கை நரம்பை தானே அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் பிரசாத், கதிரேசன் ஆகிய இருவரும் விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார், விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று(மார்ச்.12) இரவு சிகிச்சை முடிந்து சோனு வீடு திரும்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சென்று சோனுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சோனு, தான் போதையில் இருந்ததாகவும், அதனால் விடுதி மேலாளரை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.