சென்னை: சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வினீத். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.
அந்த வீடியோவில், கையில் பெரிய கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு, கானா பாடல் ஒன்றை வினீத் பாடுவது பதிவாகி இருந்தது. இதனை மற்ற சமூக வலைதளப்பக்கங்களிலும் வினீத் பதிவிட்டு வைரல் செய்தார்.
கத்தியுடன் வீடியோ பதிவிடுவது வன்முறையைத்தூண்டுவது போல் உள்ளதால், இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், வீடியோ பதிவிட்ட வினீத்தை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (பிப். 04) வினீத்தை பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், வினீத் மீது எந்த வழக்கும் இல்லை என்பது தெரியவந்தது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகமானோர் பின்தொடர வேண்டும் என்றும்; லைக்ஸ் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு கத்தியுடன் வீடியோ பதிவிட்டதாக வினீத் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.