சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் சுமார் 20 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ராஜேந்திரன் தினமும் திரையரங்குக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் திரையரங்கு வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, திரையரங்கைத் திறந்து படம் போட சொல்லி ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அவர் ஊரடங்கு முடியும்வரை திரையரங்கு திறக்கப்படக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது என கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த கும்பல் திரையரங்கின் வெளிபுறத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து, ராஜேந்திரன் அங்கிருந்து அலறி அடித்து ஓடியுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவர்களைப் பிடிக்க முற்பட்டபோது, நால்வரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பழைய கஞ்சா வியாபாரி பார்த்திபன் (33), அவரது நண்பர்கள் அருண் (20), விக்கி (17), கிச்ச (எ) கிருஷ்ணகாந்த் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இவர்கள் நான்கு பேரில் மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்து, தப்பியோடிய கிருஷ்ணகாந்தை தேடி வருகின்றனர்.
திரையங்கில் தகராறு செய்யும் சிசிடிவி காட்சி மேலும் பல நாள்களாக பம்மல், பல்லாவரம், பொழிச்சலூர், அனகாபுத்தூர் ஆகியப் பகுதிகளில் கஞ்சா விற்பனை இல்லாமல் இருந்தது. தற்போது இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் மீண்டும் கஞ்சா விற்பனை தொடங்கிவிட்டதா என்றும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சொத்துப் பிரச்னையில் அண்ணனைக் கொலை தம்பி கைது!