சென்னை:கோயம்பேடு காவல் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் ஒரு நபர் இறந்துகிடப்பதாக பூக்கடை வியாபாரி ஒருவர் சிஎம்பிடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, இறந்த நபரின் முகத்தில் காயங்கள் இருந்ததால் உடனடியாக போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவ இடத்திலிருந்து ரத்த படிந்த கல்லை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இக்கொலையை சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்தனர், அந்த விசாரணையின் போது, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (48) என்பதும், இவர் ஆம்னி பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனையில் ரவிசந்திரனின் உடல் மற்றும் முகத்தில் கட்டை மற்றும் கல்லால் தாக்கிய காயங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இறந்த ரவிசந்திரனின் சகோதரர் வெள்ளைசாமி தனது சகோதரர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ]
இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கும், ஆம்னி பேருந்து உரிமையாளருக்கும் இடையே சமீபகாலமாக பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ரவிச்சந்திரன் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது 2 திருநங்கைகள் சென்றிருப்பது பதிவாகி இருந்தது. இதனையடுத்து பதிவான அடையாளங்களை வைத்து கோயம்பேட்டில் பதுங்கி இருந்த திருங்கைகளான பிரீத்தி (34) மற்றும் ஆர்த்தி (38) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த தகவலின் பேரில் கோயம்பேட்டில் கூலி வேலை பார்த்து வரும் சம்பத்குமார் (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.