தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் - என்ஐஏ விசாரிக்க உள்ளதாக தகவல்! - போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரிப்பு

சென்னையில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து பலருக்கும் சப்ளை செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

fake passport
போலி பாஸ்போர்ட் தயாரிப்பு

By

Published : Jun 16, 2023, 8:08 AM IST

சென்னை:கடந்த 10ஆம் தேதி வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், இலங்கை நாட்டைச் சேர்ந்த நிரோஷன் என்பவர் போலியாக இந்திய பாஸ்போர்ட் மற்றும் இத்தாலி விசாவை வைத்திருந்ததாகவும், இதன் மூலம் இத்தாலி செல்ல முயற்சி செய்ததாகக் கூறி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், நிரோஷனை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நிரோஷனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மண்ணடியைச் சேர்ந்த சபிக் அகமது என்பவர் சுமார் மூன்றரை லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சபிக் அகமதுவை சுற்றி வளைத்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கான ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் தாள்கள் எங்கு கிடைக்கிறது என அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த நடராஜ் (65) என்பவர், பாஸ்போர்ட்டுக்குப் பயன்படுத்தப்படும் உள் தாள்கள் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றை சப்ளை செய்து தயாரிக்க உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் இவர்கள் இருவரையும் விசாரணை செய்ததில், தகுதியற்ற பலருக்கும் போலியாக பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்துக் கொடுத்ததும் அம்பலமானது. அவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் பாஸ்போர்ட் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சபிக் அகமது தேசிய குற்றப்புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர் என்பதும், அவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர் என்ற திடுக்கிடும் தகவலும் விசாரணையில் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீவிரவாத அமைப்பில் தொடர்புடைய சபிக் அகமது, நடராஜ் உடன் கூட்டு சேர்ந்து யார் யாருக்கெல்லாம் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தார்கள் என மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இவர்கள் மீது ஏற்கனவே 2 போலி பாஸ்போர்ட் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தார்களா என்ற கோணத்திலும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மே 19ஆம் தேதி சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில், முகமது ஷேக் இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரை கடந்த 30ஆம் தேதி கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இவர்களை கைது செய்து விசாரணை செய்ததில், இந்தியா முழுவதும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத நபர்களுக்கு மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் அலுவலகம் அமைத்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்த முக்கிய நபரான அகமது அலி கான் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், அகமது அலி கான் கும்பலுக்கும், சபிக் அகமது கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதால், தேசிய புலனாய்வு முகமையும் இந்த வழக்கு குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆம்பூரில் ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை முயற்சி.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details