சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் உள்ள பிரசன்ன விநாயகர் கோயில் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இரவு ராம்குமார் மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று பின் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் ராம்குமார் கடையினுள் சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கடையின் ஷட்டரை உடைத்து இருவர் உள்ளே செல்வதும், பின் கடையின் விளக்கை போட்டுவிட்டு கல்லா பெட்டியில் பணம் இல்லாத விரக்தியில் கடையில் இருந்து சிகரெக் பாக்கெட், பெர்பியூம் பாட்டில்கள் மற்றும் கடலை மிட்டாய் டப்பா ஆகியவற்றை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது.
இதுதொடர்பாக ராம்குமார் காவல் துறை அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வேப்பேரி காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதில் இருந்த 3 இளைஞர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.