சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை செய்து ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து, தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை காவல்துறையினர் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு ஒன்று இவர் மீது நிலுவையில் உள்ளது. அதே போல ஏழு கிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பண பரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்தவரான ஹாரூன் ரஷித், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவரான முகமது முஸ்தபா, தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.
இந்த திடீர் சோதனையில் தொடர்புடைய நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர் யார் யாருடன் தொடர்பில் உள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:விவசாயி வெட்டி கொலை: திரும்பும் இடமெல்லாம் போலீஸ்... என்ன நடக்கிறது நெல்லையில்?