சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வீடு வாங்குவது என்பது அனைவரதும் கனவு, அதில் திரைபிரபலங்களுக்கும் விதிவிலக்கல்ல. குறிப்பாக திரைப்பிரபலங்கள் அடிக்கடி ஷூட்டிங் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக பிற மாநிலத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் அவர்களின் வீடுகளை முழுவதுமாக கண்காணிக்க ஊழியர்களை நியமிக்கின்றனர். அதிலும் பெரும்பாலான பிரபலங்கள் வடமாநிலத்தவரையே பணி அமர்த்துகின்றனர்.
இப்படி திரைப்பிரபலங்களின் வீடுகளில் கைவரிசைபணியாற்றும் ஊழியர்கள் அவர்களது வீடுகளில் பணம் மற்றும் தங்க நகைகளை கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 5 திரைப்பிரபலங்களின் வீடுகளில் ஊழியர்கள் நகை,பணம் கைவரிசை காட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
டார்லிங், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இவரது வீட்டில் வேலைபார்த்த தனுஷ் என்பவர் விலையுயர்ந்த கேமரா மற்றும் 40 ஆயிரம் பணம் திருடிவிட்டு தப்பிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. திருப்பூரில் பதுங்கி இருந்த தனுஷை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பார்வதி நாயர். நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வந்த பார்வதி நாயரின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி 9 லட்சம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் 3.5 லட்சம் மதிப்புள்ள ஐபோன், லேப்டாப் ஆகியவை திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி பார்வதி நாயரின் வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை கைது செய்தனர்.
அடுத்தபடியாக எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ஆர்.கே (எ) ராதாகிருஷ்ணா. தொழிலதிபரான இவர் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள வீட்டில் கடந்த வருடம் நவம்பர் 11ஆம் தேதி இவரது மனைவி ராஜியை கட்டிப்போட்டு கத்திமுனையில் 250 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையில் ஆர்.கே வீட்டில் பணியாற்றிய காவலாளியான நேபாளி ரமேஷ், அவரது கூட்டாளியுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு 120 சவரன் நகை மீட்கப்பட்டது.