சென்னை:கடல் உயிரினங்கள் அதிக அளவில் காணப்படும் கடற்கரைகளுள் பெசன்ட் நகர் கடற்கரையும் ஒன்று. இந்த கடற்கரையில், இரவு நேரத்தில் ஆமைகளைக் காண முடியும். அதேபோல், சிலவகை சிப்பி போன்ற உயிரினங்கள் மணற்பரப்பிலும் காணப்படும். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெசன்ட் நகரின் கடற்கரையிலும், கரையோர நீர்நிலைகளிலும், ப்ளூ டிராகன்கள் (Glaucus Atlanticus) என கூறப்படும் ஒரு வகை கடல்வாழ் உயிரியைக் காண முடிகிறது.
இது குறித்து கடல் உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், “இந்த வகை உயிரினங்கள் பொதுவாக ஆழ்கடலில்தான் இருக்கும். இது ப்ளூ டிராகன் அல்லது ப்ளூ பட்டன் என்று அழைக்கப்படும். இந்த வகை ப்ளூ டிராகன்கள் சற்று நச்சுத்தன்மை கொண்டவை. இது கொட்டினால், கடுமையான வலி ஏற்படும். மேலும், கடலின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பத்தை இதனால் தாங்க முடியாது.
வெப்பம் அதிகமானால் இது உயிரிழக்க நேரிடும். இந்த கடல்வாழ் உயிரி, காரைக்கால் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னால் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. மேலும், சமீபத்தில் வீசிய புயல் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக, இவை கரைக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம்” என தெரிவித்தனர்.