சென்னை:கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது மகள் தந்தையின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் வீட்டிலிருந்த தனது உடைமைகளை எடுப்பதற்காகச் சிறுமி சென்றுள்ளார். அப்போது, வீட்டிலிருந்த சிறுமியின் மாமாவால் அவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக தன் தந்தையிடம் புகார் கூறியுள்ளார்.
இதன் பேரில் பதிவான போக்சோ வழக்கில், முன்ஜாமீன் கோரி சிறுமியின் மாமா இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய காதலி குடும்பத்தினர் மீது வழக்கு.. பீகாரில் நடந்தது என்ன?
அப்போது, இதனை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக மனுதாரர் தரப்பில் கூறினாலும், இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸ் விசாரணை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். திரை மறைவில் ஒழிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என குறிப்பிட்டு, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனும், அந்த குழந்தையின் கண்ணீரை துடைக்கப்பட வேண்டியதும் முக்கியம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், முன் ஜாமீன் மறுக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் சமீபத்தில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிஆர்பி வாரிய செயலாளர், அவரது மனைவி 354.66% சொத்து சேர்ப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு!