ஈரோடு மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் தொழிற்சாலைகளின் செயலையும், இவ்விவகாரத்தில் அலட்சியம் பேணும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு அரசின் போக்கைக் கண்டித்தும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவு நீர், காவிரி ஆற்றில் தொடர்ந்து கலந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அத்துமீறலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக காவிரி போற்றப்படுகிறது. ஆனால், கள யதார்த்தம் வேறாக இருக்கிறது. காவியங்களில் காவிரி புனித நதியாக போற்றப்பட்டாலும், களத்தில் காவிரி சாக்கடையாக மாற்றப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பாயும் காவிரி, மக்கள் புனித நீராடும் தலமாகத் திகழ்கிறது. ஆனால், அங்கு சென்று சேரும் காவிரியில் மொத்தம் 52 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரியில் இவ்வளவு கழிவுகள் கலந்திருப்பது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும்.