இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்வதில் மாநிலங்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று கூறும் மத்திய அரசு, அதன் அறிவுரையை அதுவே கடைப்பிடிக்கவில்லை.
உயர் கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதை மத்திய அரசு மதித்திருந்தால், பல்கலைக்கழகத் தேர்வுகளை அனைத்து மாநிலங்களும் செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்; ஆனால், அதுதொடர்பாக எந்த மாநில அரசுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை.
பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தாது; ஆனால், மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு, மாநிலங்களை எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத அலங்கரிக்கப் பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முயல்வது ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.