விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் நவீன ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஓர் அறையில் பட்டாசுகளுக்குள் மருந்தை திணிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட தீ 20க்கும் மேற்பட்ட அறைகளுக்குப் பரவி, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளும் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். அவர்களில் பலத்த தீக்காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளித்து, அவர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் அடிக்கடி தீவிபத்து நடப்பதும், அதில் ஏராளமானவர்கள் உயிரிழப்பதும் கவலையளிக்கிறது. பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணம். பட்டாசு ஆலைகளில் அனைத்துப் பாதுகாப்பு விதிகளும் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து, அதன் மூலம் இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்படும் சூழலில், அங்கு தீக்காயங்கள் மற்றும் வெடிமருந்து விபத்து காயங்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விசயத்தில் இனியும் தாமதிக்காமல் சிவகாசி பகுதியில் இத்தகைய சிறப்பு மருத்துவமனையை அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.