சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று(பிப்.23) பாமக சார்பில், 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர், நிதிநிலை அறிக்கையின் சாராம்சங்கள் குறித்து பேசிய அன்புமணி, "தமிழ்நாடு அரசின் சார்பில் 2021-22ஆம் ஆண்டில் முதல்முறையாகவும், 2022-23ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டாலும், கலந்தாய்வு கூட்டங்களில் உழவர்கள் வலியுறுத்தும் பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுவது இல்லை.
பாமகவின் நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை, 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை 73,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் 53,000 கோடி ரூபாய் வேளாண்துறைக்கு செலவிடப்படும். பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர் வளத்துறைக்கு 20,000 கோடி ரூபாய் செலவிடப்படும். வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 12,500 கோடி ரூபாய் உழவர்கள் மூலதன மானியத்திற்குச் செலவிடப்படும்.
மேலும் 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு கடந்த காலத்தில் இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 500 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.