சென்னை:தமிழக உயர் கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி கடந்த ஆகஸ்ட் 20ஆம் நாள் ஓய்வுபெற்ற நிலையில், புதிய துணை வேந்தரை அடையாளம் காண்பதற்கான 3 உறுப்பினர் தேடல் குழு அதற்கு முன்பாகவே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழக அரசு - ஆளுநர்: தேடல் குழுவுக்கான சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கடந்த ஏப்ரல் மாதமே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் பிரதிநிதியை ஆளுநர் மாளிகை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வுக்குழு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் வரலாற்றில் இல்லாத வகையில், 4 உறுப்பினர்கள் கொண்ட தேடல் குழுவை கடந்த செப்டம்பர் 6ம் நாள் தமிழக ஆளுநரே தன்னிச்சையாக அறிவித்தார். அதில் வழக்கமாக இடம் பெற வேண்டிய 3 உறுப்பினர்களுடன் பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி ஒருவரும் சேர்க்கப்பட்டிருந்தார். இது குறித்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் இரு வாரங்களுக்கு முன் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு வெளியானதற்கு அடுத்த வாரம், கடந்த 13ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை அடையாளம் காண்பதற்கான தேடல் குழு அமைத்து அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆளுநர் மாளிகை அறிக்கையில் இடம்பெற்றிருந்த நால்வரில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி மட்டும் நீக்கப்பட்டு மீதமுள்ள மூவரும் இடம் பெற்றிருந்தனர்.
ஆளுநரின் நிலைபாடு நியாயம் அற்றது:அரசு வெளியிட்ட அந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தான் ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். ஆளுநரின் இந்த நிலைப்பாடு நியாயமற்றது ஆகும். சென்னை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சென்னை பல்கலைக்கழக சட்டத்திற்கு உட்பட்டு தான் அமைய வேண்டும். சென்னை பல்கலைக்கழக சட்டத்தின்படி தேடல் குழுவில் மூவர் மட்டும் தான் இடம் பெற முடியும்.
அதன்படி தான் மூவர் கொண்ட தேடல் குழுவை அமைத்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் சட்டத்தின்படியே உள்ளன. அரசின் அறிக்கையை திரும்பப் பெறும்படி ஆளுநரால் கோர முடியாது.தமிழ்நாட்டின் ஆளுநர் என்பவர் அவரது பதவியின் வழியாக தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைகழங்களில் 21 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கிறார்.