தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதியப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க - ராமதாஸ்! - பணி நிரந்தரம்

சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதியப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தொகுப்பூதியப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய  வலியுறுத்தல்
தொகுப்பூதியப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

By

Published : Mar 28, 2023, 6:51 PM IST

சென்னை: சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதியப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதிய பணியாளர்களில் முத்துலிங்கம் விஷம் குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தொகுப்பூதிய பணியாளர்களின் நிலை, தற்கொலைக்கு முயலும் அளவுக்கு மோசமடைந்திருப்பது வேதனையளிக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் தொகுப்பூதியப் பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்டு இன்று வரை அதே பணியிலேயே நீடிக்கும் 205 பணியாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13.03.2023 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தியும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காத நிலையில் தான் முத்துலிங்கம் என்ற தொகுப்பூதிய பணியாளர் இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கவலைக்கிடமாக உள்ள அவருக்கு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பிற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 205 ஊழியர்களின் நிலையும், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் 140 பேரின் நிலையும் கவலைக்குரியவை. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ரூ.1500 ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு இப்போது ரூ.3,500 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் நாட்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப்படும். வழக்கமாக தொகுப்பூதியத்தில் பணியில் சேரும் பணியாளர்களுக்கு இரு ஆண்டுகளில் பணி நிலைப்பு வழங்கப்படும். ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக பணி நிலைப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

அதைக்கண்டித்து தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு இப்போது வரை தீர்வு கிடைக்காதது தான் மீண்டும் போராட்டம் வெடித்ததற்கு காரணம் ஆகும். ஆனால், இந்தப் போராட்டத்திற்கும் அரசிடமிருந்து விடை கிடைக்கவில்லை. தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் கோரிக்கை குறித்து உயர் கல்வித்துறைக்கு துணைவேந்தர் தெரிவித்தும் கூட ஆக்கப்பூர்வமான விடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயர் கல்வித்துறை அமைச்சரிடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர் சங்கப் பொறுப்பாளர்களிடம் இந்த சிக்கலை கொண்டு சென்ற போது, அவர்களை பணி நிரந்தரம் செய்ய நிதித்துறை செயலாளர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்கள் பணி நீக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி பணியாளர்களின் தலைக்கு மேல் பணிநீக்கம் என்ற கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது. இது குறித்து பா.ம.க. பலமுறை வலியுறுத்தி உள்ளது. எனினும் பா.ம.க.வின் வலியுறுத்தலால் அவர்களுக்கு இடைக்காலமாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதே தவிர, பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.

இப்போதும் கூட அவர்களின் பணி எந்த நேரமும் நீக்கப்படலாம் என்பதால் அவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் கோரிக்கை நியாயமானது. தொகுப்பூதியர்களாகவும், தற்காலிக ஊழியர்களாகவும் பணியாற்றி வரும் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும் தான் செய்யப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தொகுப்பூதியர்களையும், தினக்கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய பல்கலை. நிர்வாகம் மறுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. அவர்களுக்குப் பணிநிரந்தரம் வழங்க நிதித்துறை எதிர்ப்பு தெரிவிப்பது தான் சிக்கலுக்கு காரணமாகும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்காக மிகக்குறைந்த ஊதியத்தில் 13 ஆண்டுகளாக உழைத்து வரும் தொகுப்பூதியர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளக்கூடாது. அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். விஷம் குடித்த முத்துலிங்கத்திற்கு தரமான மருத்துவம் வழங்கி அவரை அரசு காப்பாற்ற வேண்டும்'' என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"மகிழ்ச்சியான நினைவுகள்" - அரசு பங்களாவை விட்டு வெளியேறுகிறேன் - ராகுல் காந்தி உதிர்த்த வார்த்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details