சென்னை:தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான தென்பெண்ணை ஆற்றுநீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான தீர்ப்பாயத்தை ஜூலை 5 ஆம் தேதிக்குள் அமைப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பாயத்தை அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமைகளை பறிக்க முயலும் கர்நாடகத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை கடந்த ஜூன்29-ஆம் தேதி, தில்லியில் சந்தித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டுடனான தெண்பெண்ணை ஆற்றுநீர் சிக்கலை இருதரப்பு பேச்சுகளின் மூலம் தீர்த்துக் கொள்ள கர்நாடகம் விரும்புவதாவும், அதனால் தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தமிழகத்தின் உரிமையை சட்டவிரோதமாக வன்கைப்பற்றல் செய்து விட்டு பேசித் தீர்ப்போம் என்பதற்கு ஒப்பானது. குற்றம் இழைத்தவர்கள் விசாரணையைத் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பேச்சுகளை அல்ல. தென்பெண்ணை நீரை அணை கட்டி பறித்துக் கொள்ள துடிக்கும் கர்நாடகத்திற்கு, உரிமையை இழந்த தமிழகத்திற்கு இணையாக அமர்ந்து பேசும் உரிமை கிடையாது.
இதை தீர்ப்பாயம் தான் தீர்க்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோல் கிராமத்தில், மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை பொய்யான காரணங்களைக் காட்டி கர்நாடக அரசு பெற்று விட்டது. அதனடிப்படையில் அணை கட்ட, தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வழக்கை தள்ளுபடி செய்ததுடன், இச்சிக்கலுக்கு தீர்வு காண தீர்ப்பாயம் அமைக்கும்படியும், மத்திய அரசை அணுகும்படி ஆணையிட்டது.
அதன் அடிப்படையில், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் எந்த பயனும் ஏற்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தை தமிழகம் மீண்டும் அணுகியது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் 14-ஆம் நாளுக்குள் தீர்ப்பாயத்தை அமைக்கும்படி கடந்த திசம்பர் 14-ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
அதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, வரும் ஜூலை 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. அதன்படி அடுத்த 3 நாட்களுக்குள் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டியுள்ள நிலையில் தான், அதற்கும் முட்டுக்கட்டை போட கர்நாடக அரசு துடிக்கிறது.