சென்னை:கர்நாடக அரசு பட்டப்படிப்பை முடித்து 6 மாதங்கள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது பாராட்டத்தக்கது என என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கர்நாடக அரசு படித்து பட்டம் பெற்று 6 மாதங்களாகியும் வேலை பெறாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதமும், பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதமும் வழங்கும் திட்டம் தான் இதுவாகும்.
இது படித்த இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்கும் நோக்குடன் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் உதவியாகும். படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு போட்டித்தேர்வுகளையும், குடிமைப்பணி தேர்வுகளையும் எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்காகச் செய்யும் செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈடுகட்டும் வகையில் பட்டம் பெற்றதிலிருந்து 6 மாதத்தில் தொடங்கி அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவ்வுதவியைக் கர்நாடக அரசு வழங்கவுள்ளது. கர்நாடக அரசின் இந்த தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இதே போல் மாற்றியமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசோ யாருக்கும் பயனற்ற வகையில், 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தையும், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. தமிழக அரசின் திட்டம் பயனற்ற திட்டமாகும். கர்நாடகத்தில் மாதம் ரூ.3000 வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மாதம் ரூ.600 மட்டுமே, அதாவது அங்கு வழங்கப்படுவதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான் இங்கு வழங்கப்படுகிறது.