சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரும் கடிதத்தையும் முதலமைச்சரிடம் அவர் வழங்கினார். அந்தக் கடிதத்தில் “தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1881ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படாத நிலையில், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் காந்தியின் பிறந்தநாளான கடந்த அக்டோபர் 2ஆம் நாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தின் சமூகநீதி சிறப்புகளில் முதன்மையான 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘‘69 சதவீத இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.