தமிழ்நாட்டில் நாளை(மே.24) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமலுக்கு வருகிறது. இந்தச் சூழலில், பொது மக்களிடையே ஏற்பட்ட அச்சத்தைத் தொடர்ந்து பலரும் காய்கறி சந்தைகளில், இறைச்சிக் கடைகளில் கூட்டமாகச் சென்று பொருள்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காண பல தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாளை முதல் தளர்வில்லா ஊரடங்கு என்பதால் நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை. அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொத்துக் கொத்தாக கரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்.
சென்னையிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதும், வழக்கமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டதும் தேவையற்றவை. இவை தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கரோனாவை ஏற்றுமதி செய்து விடும்!
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது!
ஆனால், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு வாரத்தில் படிப்படியாக பரவ வேண்டிய கரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடு தான். ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது என்பதே உண்மை" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:பட்ட காலிலேயே படும்... கெட்ட குடியே கெடும் - பாமக நிறுவனர் ராமதாஸ்