தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கோயில்களைத் தொல்லியல் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்'

சென்னை: தமிழ்நாட்டின் கோயில்களை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk-ramadoss-statement
pmk-ramadoss-statement

By

Published : Mar 3, 2020, 3:21 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள பழமைவாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றம்செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்படும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் செயலாகும்.


தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய பெருமைமிக்க கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையால் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டுவருகின்றன. அத்தகைய சூழலில் அவற்றை மத்திய தொல்லியல் துறையிடம் தாரைவார்க்க மத்திய அரசு துடிக்கிறது. இந்தத் தகவலை வெளியிட்ட மத்திய கலா்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், அதற்கான முறையான காரணங்களைத் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டின் கோயில்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுவரும் நிலையில், அவற்றை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கோயில்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சி. இதுபோன்ற அப்பட்டமான கலா்சாரப் படையெடுப்பை அனுமதிக்க முடியாது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் வரை உயிரும், உணர்வும்மிக்க வழிபாட்டுத் தலங்களாகத் திகழும் கோயில்கள், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு சென்றவுடன் உயிரும், உணர்வும் அற்ற புராதன சின்னங்களாக மாறிவிடும். இது தடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் ஏதேனும் கோயில்கள் பெருமையுடனும், புகழுடனுமிருந்தால் அந்தக் கோயில்களைத் தங்கள் வசமாக்கிக் கொள்வது மத்திய தொல்லியல் துறையின் வாடிக்கையாகிவருகிறது. தமிழ்நாட்டின் கோயில்களைக் கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல் துறைக்கு இருந்தால், அதைக் கைவிட வேண்டும். அதனைத் தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details