தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பாதை' : திட்டத்தை கைவிட அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

சென்னை: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

By

Published : Jul 8, 2020, 3:27 PM IST

கோவை மாவட்டம், இருகூரிலிருந்து கர்நாடகத்தின் தேவனகொந்தி நகருக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்காக, தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் திட்டத்திற்கு (Irugur-Devangonthi Pipeline Project - IDPL) விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனகொந்தி பகுதியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்குத் தேவைப்படும் பெட்ரோலை கொண்டு செல்வதற்காக இருகூரிலிருந்து தேவனகொந்தி நகருக்கு எண்ணெய்க் குழாய் பாதை அமைக்க பாரத் பெட்ரோலிய நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்த எண்ணெய்க் குழாய் பாதை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக மொத்தம் 294 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படவுள்ளது.

எண்ணெய்க் குழாய் பாதையின் பெரும்பகுதி விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதால், அத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உழவர்களின் எதிர்ப்பு காரணமாக சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த வாரத்தில் நடைபெறுவதாக இருந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை மாற்று பாதையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 7 மாவட்டங்களில் உள்ள 40 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இருகூர் - தேவனகொந்தி எண்ணெய்க் குழாய் பாதை திட்டத்தில் உழவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை விளைநிலங்களுக்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்படுத்தும்படி பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details