பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது.
வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்து விடவில்லை. 1980ஆம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21பேரின் உயிரைத் தியாகம் செய்து பெற்றது தான் 20% இட ஒதுக்கீடு ஆகும்.
1989ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகு தனி ஒதுக்கீடு கேட்டு பாமக போராடி வந்தது. 30 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் தொடருகிறது. அதன்பின் 12 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு மனம் வரவில்லை. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம் என்று ஆணையிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு 28.10.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து வலியுறுத்தினேன்.
ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அவர் நடத்தவில்லை. காரணம், அத்தகைய கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான். அதுமட்டுமின்றி, 30.07.2010 அன்று முரசொலியில் எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே கலைஞர் அறிவித்தார்.
1989 முதல் 2013 வரை மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக மொத்தம் 22 அமைச்சர் பதவிகளைப் பெற்றது. அவற்றில் வெறும் இரண்டு பதவிகள் மட்டுமே 20 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டிவனம் வெங்கட்ராமன், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆனால், மக்கள்தொகையில் 0.01 விழுக்காடு கூட இல்லாத ஸ்டாலினின் சமுதாயத்திற்கு ஆறு அமைச்சர் பதவிகள், அதுவும் கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. திமுகவுக்கு உயிர் கொடுத்த வன்னியர்களுக்கு திமுகவில் இவ்வளவு தான் மரியாதை.