இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா தாக்குதலால் தமிழ்நாட்டில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 167 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, சென்னை பொது மருத்துவமனையில் 17 வயது சிறுமி அனுமதிக்கப்பட்ட 4 மணி நேரத்தில் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த வாரம் வரை 0.67% ஆக இருந்து வந்த உயிரிழப்பு விகிதம், இப்போது 0.80% ஆக அதிகரித்திருக்கிறது. இந்திய சராசரியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு என்றாலும் கூட, கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது.
சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக, அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் குழுவே முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை விரைந்து கண்டுபிடித்து மருத்துவம் அளிக்க வேண்டுமானால், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரம் பேராவது ஒரு நாளைக்கு கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.