சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் உள்ளதால், அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது; மத்திய அரசு மறுகேள்வி கேட்காமல் அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். அரசு நிர்வாகத்தின் அடிப்படை தெரியாமல் சித்தராமையா தெரிவித்துள்ள இந்தக் கருத்து கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(செப்-12)அறிக்கை மூலம் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், "கர்நாடக மாநிலம் மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லையில் தான் உள்ளது. அதை தமிழ்நாடு எதிர்க்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், தமிழ்நாடு தேவையில்லாமல் தொல்லை கொடுக்கிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகும் கூட, அதற்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய முன்வரவில்லை" என்று கூறியிருக்கிறார்.
பலமுறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், பதவி வகித்தவரும், இரண்டாவது முறை முதலமைச்சராக பதவி வகிப்பவருமான சித்தராமையா, இந்திய அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம், இரு மாநில நீர்ப்பகிர்வு உடன்பாடு ஆகியவற்றின் அடிப்படை கூட தெரியாமல் தமிழ்நாட்டிற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பது தவறு; இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடகத்தில் இருப்பதால், அதுபற்றி தமிழ்நாடு கேள்வி எழுப்பக் கூடாது என்பது அறியாமையின் உச்சம் ஆகும். தமிழ்நாடும், கர்நாடகமும் இந்தியா என்ற நாட்டின் இரு மாநிலங்கள் தானே தவிர, இரு தனித்தனி நாடுகள் அல்ல. எனவே, கர்நாடகம் அதன் விருப்பம் போல செயல்பட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட முடியும்.