தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை" - ராமதாஸ்! - pattali makkal katchi

PMK Ramadoss: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

PMK Ramadoss
பாமக நிறுவனர் இராமதாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:51 PM IST

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 37 பேரை 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாரை ஒட்டிய இந்திய பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரை கடந்த 14ஆம் தேதி தான் இலங்கைக் கடற்படை கைது செய்தது. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

பின், மீனவர்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்று தான் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இரக்கமற்ற செயல். தமிழக மீனவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மீண்டும், மீண்டும் கைது செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கம்.

அதன் ஒரு கட்டமாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலையை தாமதிப்பதற்காக புதிய உத்திகளை இலங்கை அரசு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக இலங்கை அரசு திட்டமிட்டு தாமதம் செய்ததால் அவர்களின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதே உத்தியை இலங்கை அரசு தொடர்ந்து கடைபிடித்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ஒருபுறம் மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்தல், இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல் என இருமுனைத் தாக்குதலை இலங்கை நடத்தி வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளூர் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்து விடாது. தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details