தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசுத்தொகுப்பு எப்போது? - உடனடியாக அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்! - சென்னை செய்திகள்

Ramadoss: பொங்கல் பரிசுத்தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk ramadoss
ராமதாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 3:01 PM IST

சென்னை: பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாததால், பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு விடுமோ என்ற அச்சமும், கவலையும் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ஆங்கிலப் புத்தாண்டு நாள் பிறக்கவிருக்கும் நிலையில், அடுத்த இரு வாரங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

போதிய வாழ்வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்களுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக, கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும்.

ஏழை மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், பொங்கலுக்கு படைக்கப் பயன்படும் செங்கரும்பை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு, நல்ல விலை கொடுத்து அதை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதும் காரணமாகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில், பரிசுத் தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாததால், பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு விடுமோ என்ற அச்சமும், கவலையும் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பை நம்பித்தான் கரும்பை சாகுபடி செய்கின்றனர். நடப்பாண்டில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், தருமபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமாக பொங்கல் சந்தைக்குத் தேவைப்படும் கரும்பை விட, இரு மடங்குக்கும் கூடுதல் ஆகும்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை என்றால், விளைவிக்கப்பட்ட கரும்புகளில் சந்தையின் தேவை போக மீதமுள்ளதை எதற்கும் பயன்படுத்த முடியாது. பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால் உற்பத்திச் செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை தமிழ்நாட்டு உழவர்களால் தாங்க முடியாது. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:2024 புத்தாண்டை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு மக்கள்..! போலீசார் பாதுகாப்பு தீவிரம்..

ABOUT THE AUTHOR

...view details