சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசனின் பதவிக்காலம் நேற்றுடன் (நவ. 30) நிறைவடைந்த நிலையில் ஓய்வு பெறும் நாளில், சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியும், பேரவைச் செயலர் பதவிக்கு பதில் பேரவையின் முதன்மைச் செயலர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பதவி உயர்வு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார் சீனிவாசன். இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவைச் செயலர் கே.சீனிவாசன் பதவிக்காலம் நேற்றுடன்(நவ. 30) நிறைவடைந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் கூடிய மூன்றாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
பதவிக் காலம் முடிவடைந்த ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்பதை அறிந்தும் பேரவைச் செயலகம் இதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளராக 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் நாள் நியமிக்கப்பட்ட கே.சீனிவாசனுக்கு 60 வயது நிறைவடைந்ததையடுத்து நேற்றுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
சட்டப்பேரவையின் புதிய செயலராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் நிலவி வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு சீனிவாசனின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு முதன்மைச் செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்திருக்கிறது. இது சட்டவிரோதமானதும்.
சட்டப்பேரவைச் செயலராக சீனிவாசன் நியமிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட வசந்திமலர், சுப்பிரமணியன் ஆகியோர் இப்போதும் முறையே சிறப்பு செயலர், கூடுதல் செயலர் பதவிகளில் நீடிக்கின்றனர். அவர்கள் தவிர இணைச் செயலர் நிலையில் உள்ள 7 பேரில் மூத்தவரான சாந்தியும் செயலராக நியமிக்கப்பட தகுதியானவர் ஆவார்.
ஆனால், அவர்களை புறந்தள்ளிவிட்டு சீனிவாசனுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதால், அவரை விட கூடுதல் தகுதியும், பணி மூப்பும் கொண்ட வசந்திமலர், சுப்பிரமணியன் ஆகியோர் செயலராகும் வாய்ப்பு சட்டவிரோதமாக பறிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைச் செயலராக விதிகளை மீறி சீனிவாசன் நியமிக்கப்பட்ட போது அதை நான் கடுமையாக விமர்சித்தேன்.