தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"காவிரி நீருக்காக உச்சநீதிமன்றம் செல்லுங்கள்" - குறுவையைக் காக்க இதுதான் வழி என்கிறார் அன்புமணி - திமுக அரசாங்கம்

குறுவை சாகுபடிக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர வேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 22, 2023, 5:09 PM IST

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் உடனடியாக தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பதும், அதைத் தட்டிக் கேட்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி தீவிரமடைந்திருக்கும் சூழலில், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் 69.96 அடி, அதாவது 32.66 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ள நிலையில், அதைக்கொண்டு அதிக அளவாக ஆகஸ்ட் 10ஆம் நாள் வரை தான் காவிரியில் தண்ணீர் திறக்க முடியும். குறுவை சாகுபடி வெற்றியாக அமைய அக்டோபர் மாத இறுதி வரை காவிரியில் தண்ணீர் தேவை என்பதால் மத்திய அரசின் மூலம் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதனடிப்படையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த 20ஆம் நாள் சந்தித்துப் பேசினார். கர்நாடக அணைகளில் இருக்கும் நீரை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்கான திட்டத்தை இரு நாட்களில் வகுக்கும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தைக் கேட்டுக் கொள்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

ஆனால், இரு நாட்கள் ஆகியும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அமைச்சர் மேற்கொள்ளவில்லை. காவிரியில் கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. இத்தகைய சிக்கலான சூழ்நிலையில், குறுவைப் பயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது? அதற்காக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கவலையில் காவிரி படுகை உழவர்கள் மூழ்கியுள்ளனர். அவர்களின் கவலைகள் போக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு காவிரியில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். காவிரிப் படுகையில் குறுவைப் பயிர்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் அறம் பின்பற்றப்படவில்லை, மாறாக, அரசியல் தான் செய்யப்படுகிறது. தமிழகத்துடனான உறவை மதிக்க வேண்டும் ஆனால் காவிரி படுகை உழவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணம் கர்நாடக அரசுக்கு இருந்திருந்தால், தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம். ஆனால், தண்ணீர் இருந்தும் அதை திறந்து விட கர்நாடகம் மறுக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூலை 22ஆம் தேதிவரை 33.31 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 4 டி.எம்.சிக்கும் குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது. அதனால், இன்று வரை சுமார் 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் இன்று காலை நிலவரப்படி 55 டி.எம்.சிக்கும் கூடுதலான தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 20ஆம் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்தியளிக்கும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன்வரவில்லை. கர்நாடக அணைகளில் மிகக்குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. அதனால், கர்நாடகத்தின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்பதைத்தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடகம் முன்வரவில்லை. மத்திய அரசிடம் முறையிட்டும், அதனால் பயன் இல்லை. இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறையை நடைமுறைப்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தயாராக இல்லை. இத்தகைய சூழலில், காவிரி நீர் பெற அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும். கடந்த காலங்களில் இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்தை அணுகியே தமிழகம் தனக்கான நீதியை வென்றெடுத்துள்ளது. அதேபோல், இப்போதும் குறுவை பயிர்களைக் காப்பாற்றுவதற்காக கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என அந்த அறிக்கையின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:EPS - திமுக அரசு மக்களைப் பற்றி கவலை கொள்வதில்லை - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details