சென்னை:பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி ராமதாஸ் நேற்று (மே 28) பொறுப்பேற்ற நிலையில் இன்று (மே 29) காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "பாமக தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறேன். அதன் அடிப்படையில் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அரசியல் ஏதும் பேசவில்லை. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்றாகும்" என்றார்.
நீட் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை:தொடர்ந்து பேசிய அவர், "2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இப்போதிலிருந்தே பாடுபடுகிறோம். 2024 தேர்தலுக்கும் உடன் தயாராகிறோம். அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சினை மது மற்றும் போதை சார்ந்த பிரச்சினைகள். தமிழ்நாட்டில் பல கல்லூரிகளுக்கு வெளியில் போதை பொருள்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளேன். அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்றால் தீவிர மது ஒழிப்பு கொள்கையை கொண்டு வர வேண்டும்.