சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது தான் இதன் பொருளாகும்.
நடப்பு ஆண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது.
இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காடுக்கும் கூடுதலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தான் உள்ளன. அவற்றின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண்கள் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களைப் பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன?
முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காடுக்கும் கூடுதலான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான்.