சென்னை: தென் சென்னை காவல் இணை ஆணையர் நரேந்திர நாயரிடம் ஜெய்பீம் (Jai Bhim) படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாமக மாநில துணை பொது செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளர் குரோம்பேட்டை கண்ணன், பட்டு பாண்டியன், தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஜேஎம் சேகர் உள்பட 20க்கும் மேற்பட்ட பாமகவினர் இன்று (நவ.16) மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் " சூர்யா நடித்து வெளி வந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயத்தினரிடமும், பட்டியலின சமுதாயத்தினர் இடையேயும் கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. மேலும் வன்னியர் சமுதாய தலைவர்களைப் பற்றி அவதூறாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனால் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தொழில் புரிவோர் மற்ற சமுதாயத்தினருடன் இணக்கமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொழில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இந்த படத்தில் நடித்த சூர்யா (suriya), இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"எனக் கூறப்பட்டுள்ளது.