பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமரிடம் இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பின் சென்னை திரும்பிய அன்புமணி ராமதாஸ், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலை, காவிரி கோதாவரி இணைப்பு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தினோம். ஹைட்ரோகார்பன் டெல்டா மாவட்டங்களுக்கு தேவைப்படாது என்றும் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் எடுத்துக் கூறினோம். பிரதமர் இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் என்றார்.
ஆயிரத்து நாணூறு வருடங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வணிகம் தொடங்கப்பட்டது. இந்த இடத்தில் பிரதமரும் சீன அதிபரும் சந்திப்பதை மிகவும் பெருமையாக பார்க்கிறோம் என்று கூறினார். தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்த சந்திப்பில் இந்திய-சீன எல்லைப் பிரச்னை,பொருளாதாரம், கலாசாரம் ஆகியவை முன்னேற வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.