இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, 'திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்றுள்ளனர். மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் உள்ள கிழக்கு வாசை பகுதியில் வேலை செய்து வந்த அவர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வாழ்வாதாரத்தை இழந்து, ஒருவேளை உணவிற்கே வழியின்றித் தவித்து வருகின்றனர். இதனால் சொந்த ஊருக்குத் திரும்ப அரசு அறிவித்த இணையதளத்தில் பதிவு செய்தும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் அலுவலர்களும் 216 பேருக்காக தனி ரயிலை இயக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலுள்ள தமிழர்களை அழைத்து வருவதற்கான, தமிழ்நாடு அரசின் பொறுப்பு அலுவலர் பூஜா குல்கர்னியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, 216 பேரும் சொந்த ஊர் திரும்ப தனிப் பேருந்துகளை ஏற்பாடு செய்தால், அவற்றுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவதாகக் கூறியுள்ளார்.