திருநெல்வேலி:அண்மையில் கடலூரில் என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்களில் 20 பேரை, நேற்று நள்ளிரவு திடீரென பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.
இதனையடுத்து பாமக மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் திருநெல்வேலிக்கு வருகை தந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள பாமகவினரை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் சிறைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய பாமகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூரில் இருந்த எங்கள் கட்சியினரை இன்று நான் சந்திக்க இருந்தேன். அதை தடுப்பதற்காக அவர்களை பாளையங்கோட்டை மற்றும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று கூறினார்.
"எங்கள் போராட்டத்தில் ஒரு பத்து நிமிடம் பதற்றமான சூழல் இருந்தது. சமூக விரோதிகள் ஊடுருவி போலீசாரை தாக்கினர். இனி வேறு யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தான் என்எல்சி நிறுவனத்தின் நோக்கம். ராணுவத்தையே பார்த்த நாங்கள் தமிழக காவல்துறையை கண்டு அஞ்ச மாட்டோம்" என்று தெரிவித்தார்.
64,750 ஏக்கர் விலை நிலங்களை என்எல்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் சொல்வதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது என்றும், 3வது சுரங்கம் தொடங்க 26 கிராமங்கள் கிட்டத்தட்ட 12,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது என்றும், தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிகாட்டினார்.