இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஒரு முழு மாதம் (ஏப்ரல்) நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் கரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு கோரிய நிதியை விரைந்து பெற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கரோனா ஒழிப்புப் பணிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக, முதலில் ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி கோரியிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தகட்டமாக, உணவு தானியங்கள் வாங்குவதற்காக ரூ. ஆயிரத்து 321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காகத் தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியிலிருந்து ஆயிரம் கோடியும் வழங்கும்படி மத்திய அரசைக் கோரியிருந்தார்.
ஆனால், இதுவரையில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ஆறு ஆயிரத்து 420 கோடியை மத்திய அரசு வழங்கிய போதிலும், தமிழக அரசு கோரிய நிதி கிடைக்கவில்லை.
நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எட்டு ஆயிரங்கோடிக்குப் பத்திரம் வெளியிட்டு கடன் திரட்டியிருக்கிறது. நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த சொந்த வரி வருவாய் இலக்குகளில் பாதியைக் கூட எட்ட முடியுமா? என்பது ஐயமாகவே உள்ளது.