இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"வேளாண் விளைபொருள்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்தி செலவு ரூ.1,871.32 என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 50% லாபம் ரூ.935.66 சேர்த்து, ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக ரூ.2,806.98 நிர்ணயிக்கப்படுவது தான் நியாயமானதாக இருக்கும். நெல்லுக்கான உற்பத்திச் செலவுகளை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தான் கணக்கிடுகிறது.
உழவர்களுக்கு 50% லாபம் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையில் அரசுக்கு உடன்பாடு தான் எனும் நிலையில், உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,806 வழங்கப்படுவது தான் சரியானதாக இருக்கும். இதில் தமிழ்நாடு அரசுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்துவதாக 2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த போதிலும், உற்பத்திச் செலவு சரியாக கணக்கிடப்படாததால் தான் நடப்பாண்டில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்திச் செலவை விட மிகக் குறைவாக உள்ளது.