தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூற்றாண்டு காணும் சங்கரய்யா - பாமக நிறுவனர் வாழ்த்து - சங்கரய்யா

நூறாண்டை காணும் தோழர் சங்கரய்யா பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

pmk founder ramadoss statement  pmk founder  நூற்றாண்டு காணும் சங்கரய்யா  நூற்றாண்டு காணும் சங்கரய்யாவிற்கு பா ம க நிறுவனர் வாழ்த்து  சங்கரய்யா  pmk founder ramadoss wishes for sankariah birthday
பா ம க நிறுவனர் வாழ்த்து

By

Published : Jul 15, 2021, 12:20 PM IST

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தனது 100-வது வயதில் அடியெடுத்து வைத்தார்.

தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய, இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.

பா.ம.க. நிறுவனர் வாழ்த்து

இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இது தொடர்பாக வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,

“இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அக்கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளருமான தோழர் சங்கரய்யா இன்று (ஜூலை 15) நூறாவது அகவையை எட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்“.

வயது ஒரு எண்: மக்கள் பணியில் இன்றும் இளைஞர்

“மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண் தான். அது தோழர் சங்கரய்யாவுக்கும் பொருந்தும். அகவை நூறை அவர் எட்டினாலும் அவரது மக்கள்நலப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப் படவில்லை. இந்த வயதிலும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உட்பட பல தளங்களில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் இன்றும் இளைஞராகத் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

எத்தனை போராட்டம், சிறை வாழ்க்கை

தோழர் சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை 9 வயதில் தொடங்கியது. விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டி வந்த பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் வெடித்த போராட்டத்தில் 9 வயது சிறுவனாக சங்கரய்யாவும் கலந்து கொண்டார்.

அதன்பின் 90 ஆண்டுகளுக்கு மேலாகியும் தோழர் சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1938 ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம், பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டம், பொதுவுடைமை இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலம் என பல கால கட்டங்களில் அவர் சிறை வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்.

அரிய மனிதன் - என்றும் மரியாதை

சென்னை மாகாணத்தின் பெரும்பாலான சிறைகளில் சங்கரய்யாவின் வாழ்க்கை கழிந்திருக்கிறது. அரசியலில் தோழர் சங்கரய்யாவைப் போன்ற தூய்மையான மனிதர்களைபார்ப்பது அரிதிலும் அரிதாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தோழர் சங்கரய்யா பணியாற்றிய 7 ஆண்டுகளில் அக்கட்சி ஏராளமான போராட்டங்களை நடத்தியது. அப்போராட்டங்களை முன்னின்று நடத்திய தோழர் சங்கரய்யாவின் துணிச்சலும், தவறுகளை சுட்டிக்காட்டும் தன்மையும் சில அரசியல் தலைவர்களுக்கு எரிச்சலூட்டியதும் உண்டு.

2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கும் முன்பும், பின்பும் தோழர் சங்கரய்யாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல அறிமுகமும், ஒருவர் மீது மற்றொருவருக்கு மரியாதையும் உண்டு. அது என்றும் தொடரும்.

தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். அதை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் தோழர் சங்கரய்யாவின் நூற்றாண்டு வடிவமைக்கப்பட வேண்டும்.

நூறாண்டை காணும் தோழர் சங்கரய்யா இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கல்விக் கண் திறந்த காமராஜர்.. வாழ்வும்- வரலாறும்!

ABOUT THE AUTHOR

...view details