சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 முதனிலைத் தேர்வில் குளறுபடி நடந்ததால், ஒரு பணியிடத்திற்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதனிலைத் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (டிச.2) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் நடத்திய குரூப் 1 பணிகளுக்கான முதனிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அவற்றில் பல விடைகள் தவறாக உள்ளன. குரூப் 1 போட்டித் தேர்வுகளில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதும், முதனிலைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் விகிதம் குறைக்கப்பட்டிருப்பதும் நியாயமற்றவையாகும் என கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு மாவட்ட துணை ஆட்சியர்கள் 18 பேர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் 26 பேர் உட்பட குரூப் 1 பணிகளுக்கு 92 பேரை தேர்ந்தெடுப்பதற்கான முதனிலைத் தேர்வுகள் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றன.
அத்தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 28 ஆம் தேதி இரவு வெளியிட்டது. ஆணையம் வெளியிட்ட தற்காலிக விடைகளில் ஏராளமான பிழைகள் உள்ளன. தற்காலிக விடைகளில் உள்ள பிழைகளை தேர்வர்கள் சுட்டிக்காட்டுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். ஆனால், தேர்வர்கள் தெரிவித்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா அல்லது பிழையான விடைகளின் அடிப்படையிலேயே விடைத்தாள்கள் திருத்தப்பட்டனவா? என்பது யாருக்கும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் தயாரித்தலிலும் குழப்பம்:
குரூப் 1 பணிகளுக்கான முதனிலைத் தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள இரு மாற்றங்கள் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிப்பவையாக உள்ளன. முதனிலைத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றில் தமிழ் வடிவம் தான் இறுதியானது என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால், ஆங்கில வடிவம் தான் இறுதியானது என்று வினாத்தாளில் குறிப்பிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
ஒருவேளை வினாக்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றம் செய்வதில் பிழை இருந்தால், அது தமிழ் வடிவத்தில் வினாக்களை படித்து தேர்வெழுதியவர்களை பாதிக்கும். தமிழ்நாட்டில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழில் வினாக்கள் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்படுவது தான் நியாயம். அதற்கு மாறாக ஆங்கிலத்தில் வினாக்களை தயாரித்து, அதை தமிழில் தவறாக மொழி பெயர்த்து விட்டு, அதன் பாதிப்புகளை தேர்வர்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது தமிழ் வழியில் படித்து போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குரூப் 1 பணிகளுக்கு முதனிலைத் தேர்வு நடத்தப்படும் போது, மொத்த பணியிடங்கள் எவ்வளவோ, அதை விட 50 மடங்கு தேர்வர்கள், அதாவது ஒரு பணியிடத்திற்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதனிலைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால், இந்த முறை ஒரு பணியிடத்திற்கு 20 பேர் என்ற விகிதத்தில் தான் முதனிலைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக அமையும் என கூறியுள்ளார்.