சென்னை: போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதா எனக் கூறி ராமதாஸ் இன்று (அக். 15) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இலங்கையுடனான ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், சிங்கள ராணுவத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் பயிற்சியளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சிகளையும், உதவிகளையும் அளிப்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும்.
இலங்கையில் நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே, அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின்போது இந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவுசெய்யப்பட்டதாகவும், அதன் ஒருகட்டமாக, இந்தியாவில் ஆண்டுக்கு 1000 சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, கூடுதலாக 50 ராணுவ அலுவலர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சியை அளிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இது ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும்.
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைப் படுகொலைசெய்த சிங்களப் படை
உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சூழலில், உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு நாடும் அண்டை நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், ஒரு நாடு அதற்கு வழங்கப்பட்ட உதவியைத் தவறாகப் பயன்படுத்தும் என்று தெரிந்தால், அந்த நாட்டுக்கு உதவாமல் இருப்பதுதான் அறம். அவ்வாறு ராணுவ ரீதியாக உதவக்கூடாத நாடுகள் பட்டியலில் மிகவும் முக்கியமானது இலங்கை ஆகும்.
இலங்கைக்கு மருத்துவ ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் உதவிகளைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்களப் படையினருக்கு உதவிகள் அளிக்கப்பட்டால், அது மீண்டும், மீண்டும் ஈழத்தமிழர்களை கொல்லவும், ஒடுக்கவும் மட்டும்தான் பயன்படும்.
ஐநா மனித உரிமைகள் ஆணையம்
இலங்கையில் அடிப்படை மனிதநேயம்கூட இல்லாத சிங்களப் படைகள் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். சிங்களப் படையினர் போர்க்குற்றங்களை இழைத்தது உண்மை என்பதை விசாரணை மூலம் உறுதிசெய்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையம், அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை இப்போது திரட்டிவருகிறது. இதுவரை 1.20 லட்சத்துக்கும் கூடுதலான ஆதாரங்களை ஐநா மனித உரிமை ஆணையம் திரட்டியிருக்கிறது.