தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1000 ஆண்களுக்கு 878 பெண்கள்... தமிழ்நாட்டில் குறைந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்: மருத்துவர் ராமதாஸ் - பெண் குழந்தை

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த அரசு சிறப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 25, 2021, 3:41 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 878ஆகக் குறைந்திருப்பதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

குறைந்து வரும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்

பெண் குழந்தைகளைப் போற்றி வணங்கும் வழக்கம் கொண்ட தமிழ்நாட்டில் அவர்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது ஆரோக்கியமான அறிகுறியல்ல. இது மாற்றப்பட வேண்டும்.

இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில் இந்தியாவில் குழந்தைப் பேறு விகிதம் இரண்டு விழுக்காடாகக் குறைந்திருப்பதால் நாட்டின் மக்கள் தொகை இனிவரும் காலங்களில் குறையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

1000 ஆண்களுக்கு 878 பெண்கள்

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2016, 2017ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் 954ஆக இருந்த இந்த விகிதம் இப்போது 878ஆகக் குறைந்து விட்டது. பெண் குழந்தைகளை சுமையாகக் கருதும் போக்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

2010ஆம் ஆண்டு வரை பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னணியில் இருந்து வந்தது. 2007ஆம் ஆண்டில் தேசிய சராசரி பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 903ஆக இருந்த போது, தமிழ்நாட்டின் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 935ஆக இருந்தது.

2010ஆம் ஆண்டில் தேசிய சராசரி 857ஆகக் குறைந்த நிலையில், தமிழ்நாட்டில் விகிதம் 935 என்ற அளவிலேயே நீடித்தது. அதன்பின் படிப்படியாக குறையத் தொடங்கிய இந்த விகிதம் இப்போது 878 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசு எளிதாகக் கடந்து சென்று விடக்கூடாது.

தவறாகக் கையாளப்படும் தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கான காரணங்களை அறிய பெரிய அளவில் ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவது, ஒற்றைக் குழந்தை கலாச்சாரம் அதிகரித்து வரும் சூழலில் அக்குழந்தை ஆணாக இருந்தால் நல்லது என பெற்றோர் கருதுவது தான் இதற்கு முக்கியக் காரணமாகும். இயற்கையாக அனைத்தும் நடந்தால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மாற்ற முடியாது.

ஆனால், வளர்ந்து விட்ட அறிவியலும், தொழில்நுட்பமும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டுபிடித்து தெரிவிப்பது தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரியக் குற்றம் என்றாலும் கூட, சட்டவிரோதமாக குழந்தைகளின் பாலினம் கண்டுபிடிக்கப் படுவதும், பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழிக்கப்படுவதும் தொடர்வது வேதனையளிக்கிறது.

பெண் குழந்தைகள் சுமையல்ல... வரம்!

செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் பிறக்கும் குழந்தை ஆணாக இருப்பதை உறுதி செய்வதற்காக 12க்கும் மேற்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ரத்தம் மூலமான மரபணு ஆய்வின் மூலம் குழந்தைகளின் பாலினம் கண்டறியப்படுகிறது. இவை தடை செய்யப்படவில்லை என்பதால் பலரும் தங்களின் குழந்தைக்கான பாலினத்தை தங்களின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கின்றனர்.

பெண் குழந்தைகள் சுமை என்ற நிலையிலிருந்து வரமாக மாறியிருக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆண்களை விஞ்சும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றனர். இந்திய ராணுவத்தில் பின்புலப் பணிகளில் மட்டுமே பணியாற்றி வந்த பெண்களை கமாண்டர்களாக நியமிக்க உச்ச நீதிமன்றம் ஆணையிடும் அளவுக்கு இப்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வூட்ட வேண்டும்.

’சிறப்புத் திட்டங்கள் வேண்டும்’

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டுபிடிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும், ஆண் குழந்தைகளை மட்டும் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதற்கான தொழில்நுட்பங்களும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் எளிதில் தப்பிக்க முடியாதபடி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக பெண் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்தும் இலவசமாக வழங்குதல், திருமண நிதியுதவித் திட்டம் நிபந்தனையின்றி அனைவருக்கும் வழங்குதல், பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் பெயரில் 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை உள்ளிட்ட ஊக்குவிப்புகள் அடங்கிய சிறப்புத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அண்ணா பிறந்த நாள்; 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - வெளியானது அரசாணை

ABOUT THE AUTHOR

...view details