சென்னை:தமிழ்நாடு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (டிச.1வெளியிட்ட அறிக்கையில், "சென்னைக்குப் பயணிப்பதற்காகக் கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். 'நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது' என்று கூறிய பெண் பொறியாளரிடம், தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி, வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று கூறிய மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.
விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் சிலர், தங்களின் பணி என்ன என்பதை மறந்து, இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களிலும் அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர்.